நடப்பு T20 உலகக்கிண்ண தொடரின் லீக் போட்டியில் 137 ஓட்டங்கள் என்ற இலக்கை பப்புவா நியூகினியாவுக்கு எதிராக போராடி எடுத்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. அந்த அணி வீரர் ராஸ்டன் சேஸின் ஆட்டம் இலக்கை சேஸ் செய்ய பெரிதும் உதவியது.
கயானவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நேற்று (02) இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் நாணயச்சழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பற்துவீச்சை தேர்வு செய்தது. பப்புவா நியூ கினியா முதலில் துடுப்பெடுத்தாடி செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ஓட்டங்கள் எடுத்தது.
50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பப்புவா நியூ கினியா. அந்த அணிக்கு இடது கை ஆட்டக்காரர் செசே பாவ் ஆட்டம் கைகொடுத்தது. அவர் 43 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் மூலம் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ஓட்டங்களை எட்டியது.
137 ஓட்டங்கள் என்ற இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் அணி மிக சுலபமாக எட்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் அணியில் அதிகம் என்பதால் இந்த எதிர்பார்ப்பு. ஆனால், சேஸிங் அப்படி அமையவில்லை. களத்தில் போராடியே இலக்கை எட்டியது மேற்கிந்தியத் தீவுகள்.
ராஸ்டன் சேஸ், 27 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்தார். அதுவே அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. பிராண்டன் கிங் 34 ஓட்டங்கள், பூரன் 27 ஓட்டங்கள், கேப்டன் பவல் 15 ஓட்டங்கள், ரசல் 15 ஓட்டங்கள் எடுத்திருந்தனர். 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்கள் எடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கூடுதலாக 15 முதல் 20 ஓட்டங்களை பப்புவா நியூ கினியா எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கலாம். இதனை போட்டிக்கு பிறகு அந்த அணியின் கேப்டன் அசாடோல்லா வாலா தெரிவித்தார். எதிரணி சிறந்த கிரிக்கெட் ஆடியதாக மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ரோவ்மன் பவல் தெரிவித்தார்.