T20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் அரோன் ஜோன்ஸின் அதிரடி ஆட்டத்தால் போட்டியை நடத்தும் இணை நாடான அமெரிக்கா கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இலங்கை நேரப்படி நேற்று (02) காலை டலாஸில் உள்ள கிராண்ட் பிரைரி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை பெற்றது. நவ்னீத் தலிவால் (61) மற்றும் நிகலஸ் கேர்டன் (51) அரைச்சதம் பெற்றனர்.
பதிலெடுத்தாட வந்த அமெரிக்க அணி முதல் இரு விக்கெட்டுகளையும் முன்கூட்டியே பறிகொடுத்தபோதும் 3ஆவது விக்கெட்டுக்காக அன்ட்ரியஸ் கௌஸ் (65) மற்றும் அரோன் ஜோன்ஸ் 131 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு வெற்றியை நெருங்கச் செய்தனர். இதன்போது நியூயோர்க்கில் பிறந்து பார்படோஸில் வளர்ந்த ஜோன்ஸ் 40 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம் அமெரிக்க அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 197 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
இது T20 உலகக் கிண்ண வரலாற்றில் துரத்தப்பட்ட மூன்றாவது அதிகூடிய வெற்றி இலக்காக பதிவாகியுள்ளது. கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் முதல் முறையாகவே உலகக் கிண்ணத்தில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.