இலங்கையின் புதிய தமிழ் திரைப்படம்  பூஜையுடன் ஆரம்பம்

இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய தமிழ் திரைப்படம் “அதிரன்”.

இலங்கையின் முன்னணி இயக்குனர் தினேஷ் கனகராஜின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளது.

ஏட்ரியன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள இலங்கையின் புதிய முழுநீள திரைப்படமான “அதிரன்” அமைந்துள்ளது.

இந்த நிலையில், திரைப்படத்தின் பூஜை மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பும் பம்பலபிட்டி அருள்மிகு ஶ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தீப்திகா ஞானசேகரன் கலந்துகொண்டிருந்தார்.

அத்துடன், திரைப்படத்தின் கதாநாயகனான முன்னணி நடிகர் சுதர்சன் மற்றும் கதாநாயகியாக சிங்கள சினிமாவின் முன்னணி நடிகையான மிச்சலா தில்ஹாரா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றவுள்ள கலைஞர்களும் தொழில்நுட்பவியலார்களும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

திரைப்படத்தின் ஆரம்ப பூஜைகளை மாணிக்க விநாயகர் ஆலய பிரதான சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றதை தொடர்ந்து, திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இனிப்பு பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இயக்குனர் தினேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்தார்.

“இந்த திரைப்படமானது இலங்கையின் கிராமத்து சூழ்நிலையை பிரதிபலிக்கும் கதைக்களமாக அமைய இருக்கின்றது. இத்திரைப்படமானது இலங்கையின் மிகப் பிரம்மாண்டமான ஒரு திரைப்படமாக வர இருக்கிறது. இலங்கை மற்றும் வெளிநாடுகளில் எமது திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இத்திரைப்படமானது நேர்த்தியான, அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் எடுக்கப்படவுள்ளது.” என இயக்குனர் தினேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

இலங்கையின் திரைப்படத் துறையை முன்னேற்றும் முயற்சியை திரைப்படத்தின் கதாநாயகன் சுதர்சன் பாராட்டினார்.

“எமது நாட்டின் திரைப்படத் துறையை முன்னேற்றுவதற்காக ஏட்ரியன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.” என இலங்கையின் முன்னணி நடிகரும் இந்திய திரைத்துறையில் தடம் பதித்தவருமான கதாநாயகன் சுதர்சன் குறிப்பிட்டார்.

மேலும், இத்திரைப்படத்தில் இலங்கையின் பல புகழ்பூத்த முன்னணி கலைஞர்களும், முன்னணி தொழில்நுட்பவியலாளர்களும் சேவையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (வைப்ஸ்நியூஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *