என்னை இந்த உலகம் காலத்திற்கும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை எல்லாம் எனக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மம்மூட்டியின் இந்த எதார்த்தமான பதில் வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் மம்முட்டி அளித்த சமீபத்திய நேர்காணல் ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்மூட்டி. இவருக்கு மலையாளம் சினிமாவையும் தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி வட்டாரங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தனது இமேஜுக்கும், நடிப்புக்கும் சவால் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மம்மூட்டி தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கண்ணூர் ஸ்கொயட், காதல் தி கோர், பிரம்ம யுகம் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் நடித்துள்ள டர்போ என்ற திரைப்படம் வசூலை அள்ளி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் பங்கேற்ற மம்மூட்டியிடம், வரும் காலத்தால் நீங்கள் எப்படி நினைவு கூறப்பட விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மம்மூட்டி அளித்த பதில் கூறியதாவது- இந்த உலகம் எத்தனையோ சிறந்த மனிதர்களை பார்த்துள்ளது. அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இன்றைக்கும் மக்களால் நினைவுபடுத்தப்படுகின்றனர். என்னை இந்த உலகம் எத்தனை காலம் நினைவில் வைத்துக் கொள்ளும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
பத்து ஆண்டுகள் அல்லது 50 ஆண்டுகள் நான் மக்கள் மனதில் இருப்பேனா? ஆயிரக்கணக்கான நடிகர்கள் திரைத்துறையில் உள்ளனர். அவர்களில் நானும் ஒருவன். எனவே என்னை எப்படி இந்த உலகம் நினைவுபடுத்திக் கொள்ளும்? உலகத்தை விட்டு சென்று விட்டால் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே எல்லோரும் நினைவு கூறப்படுவார்கள். அதன் பின்னர் எல்லோருமே காலத்தால் மறக்கடிக்கப்படுவார்கள் என்பது தான் எதார்த்தம்.