உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.
இரு அணிகளும் நியூயார்க் மைதானத்தில் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் மோதுகின்றன. இந்த தொடரின் அதிக விறுவிறுப்பு கொண்ட ஆட்டமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளது.
இந்திய அணி ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ள தனது முதல் போட்டியில், அயர்லாந்தை எதிர்கொள்ளும். முன்னதாக ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் இந்தியா மோதுகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணிகளும் 4 பிரிவுகளாக அதாவது ஏ,பி,சி,டி என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெறும்.
இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியுள்ள நிலையில், இந்த முறை உலக கோப்பை டி20 தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்த சூழலில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.
இந்நிலையில் நியூயார்க் போலீசார் போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்புக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நியூயார்க் மாகாண கவர்னர் கேத்தி ஹோச்சுல் உறுதி அளித்துள்ளார்.