முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த கல்வி முறையை மீண்டும் உருவாக்க நடவடிக்கை.
ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தைக் காப்பதற்கு அர்ப்பணிக்குமாறு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கோரிக்கை.
கடந்த காலங்களில் யாழ்பாணத்தில் காணப்பட்ட “யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்” நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், அந்தக் கல்வி முறையை மீளமைக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர் தொழில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பிக் கொண்டு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் மாணவர்களால் நிராகரிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, தொழில் கௌரவத்தைப் பேணுவது அனைத்து ஆசிரியர்களினதும் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் (25) இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஆசிரியர் நியமன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
வடமாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் 375 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அடையாள ரீதியில் சிலருக்கு நியமனங்களை வழங்கி வைத்தார்.
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:
இன்று ஆசிரியர் நியமனம் பெற்றுள்ள நீங்கள் அனைவரும் பெரும் பொறுப்பை ஏற்றுள்ளீர்கள். இன்று 35-40 மாணவர்கள் கற்கும் வகுப்பறையில் மாணவர்களின் எதிர்காலத்தை நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள். அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் உங்களது வழிகாட்டுதலின்படி உருவாக்கப்படுகிறது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடியாவிட்டால், நீங்கள் ஆசிரியர் தொழிலுக்கு உகந்தவர் அல்ல.
முன்பு யாழ் ஆசிரியர்களின் சேவை நாடளாவிய ரீதியிலும் சர்வதேச அளவிலும் மிக கௌரவத்துடன் பார்க்ப்பட்டது. அந்தப் பொறுப்பை அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றினார்கள். நான் படித்த கொழும்பு றோயல் கல்லூரியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருந்தனர்.
அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியதோடு , அவர்களின் விசேடமான அர்ப்பணிப்பின் காரணமாகவே யாழ்ப்பாணத்தில் பிரபல ஆசிரியர்கள் குறித்து இன்றும் சமூகத்தில் பேசப்படுகிறது.
அந்த ஆசிரியர் பாரம்பரியம், நாட்டின் ஆசிரியர்களுக்கு ஆசிரியப் சேவை குறித்து சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது என்றே கூற வேண்டும்.
கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதால் தான் யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள சில பாடசாலைகள் உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றிருந்தன. ஹார்ட்லி கல்லூரி மாணவர்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். எனவே, நீங்களும் அந்த கௌரவமான தொழிலில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆசிரியர் பணியில் நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். வீதியில் கோஷம் போட்டால் மாணவர்கள் உங்களை ஏற்க மாட்டார்கள். எனவே, உங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் அப்போது சிறந்த பாடசாலை முறைமையொன்று இருந்தது. நமது முன்னாள் சபாநாயகர்களில் ஒருவரான கே.பி. ரத்நாயக்க ஹார்ட்லி கல்லூரியில் கல்வி கற்றார். யுத்தம் காரணமாக ஆசிரியர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியதோடு அப்பாடசாலையும் வீழ்ச்சியடைந்தது. யாழ்ப்பாணத்தின் கல்வி முறை மீண்டும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.
வடமாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பபினர்கள், பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி யாழ்ப்பாணத்தில் பாடசாலை முறைமையை முன்னைய சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான திட்டங்களை அரசாங்கத்திற்கு வழங்குமாறு ஆளுநருக்கு அறிவிக்க விரும்புகின்றேன்.
தமிழ், சிங்கள மொழிக் கல்வியை மாத்திரம் மாணவர்களுக்கு வழங்குவது போதுமானதல்ல என்பதோடு ஆங்கில அறிவும் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இது 10-15 வருட நீண்டகால வேலைத்திட்டம் என்றாலும் அதற்கான செயற்பாடுகளை இப்போதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
ஆசிரியர் தொழிலின் கெளரவத்தைப் பாதுகாத்து வட பகுதி பிள்ளைகளுக்காகச் சிறந்த சேவையை ஆற்றுவதற்கு தம்மை அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்டு இன்று நியமிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் திலீபன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடமாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும் இங்கு உரையாற்றினார்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட வட மாகாண அரசியல் பிரதிநிதிகள், வடமாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.