ஐபிஎல் தொடர் பல இளம் வீரர்களின் திறமையை ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருந்த பல இளைஞர்களுக்கு வரப் பிரசாதமாக ஐபிஎல் தொடர் அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு மத்திய பிரதேசத்தில் வாழ்ந்து வரும் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் வாழ்க்கையிலும் ஐபிஎல் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கே கே ஆர் அணிக்காக விளையாடிய அவர் தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் பேட்டிங் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் அவர் ஜொலித்தார். இதன் மூலம் ஹர்திக் பாண்டியாவுக்குப் பிறகு அடுத்த ஆல்ரவுண்டர் நமக்கு கிடைத்து விட்டதாக ரசிகர்கள் கருதினர்.
கொல்கத்தா அணியின் சூப்பர் ஹீரோவாக தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் திகழ்ந்து வருகிறார். எப்போதெல்லாம் கொல்கத்தா அணி முக்கிய ஆட்டத்தில் தடுமாறுகிறதோ அப்போதெல்லாம் அவர் தனி ஆளாக அணியை காப்பாற்றி இருக்கிறார்.
குறிப்பாக ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் கே கே ஆர் அணி விளையாடிய போதெல்லாம் வெங்கடேஷ் ஐயர் அரை சதம் அடித்து அணியை காப்பாற்றி இருக்கிறார்.இதன் மூலம் ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் சுரேஷ் ரெய்னாவுக்கு பிறகு அதிக அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்று பெருமையை வெங்கடேஷ் ஐயர் பெற்றிருக்கிறார்.
சார்ஜாவில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் 26 ரன்கள் மீண்டும் குவாலிபையர் 2வில் டெல்லிக்கு எதிராக 55 ரன்கள், துபாயில் இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக 50 ரன்கள் , அகமதாபாத்தில் குவாலிபயர் ஒன்றில் சன்ரைசஸ்க்கு எதிராக 51 ரன்கள், 2024 இறுதிப்போட்டியில் சன்ரைசஸ்க்கு எதிராக அரை சதம் என வெங்கடேஷ் ஐயர் பட்டையை கிளப்பி இருக்கிறார். இதன் மூலம் கொல்கத்தா அணி எப்போதெல்லாம் தடுமாறுகிறது அவர்களுக்கு ஒரு காவல் தெய்வம் போல் வெங்கடேஷ் ஐயர் இருந்து வருகிறார்.