3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை எளிதாக வீழ்த்தி கொல்கத்தா அணி 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.


டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர்.

அபிஷேக் சர்மா 2 ரன்னில் ஸ்டார்க் வேகத்தில் போல்டாகி வெளியேற, அவரைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



திரிபாதி 9 ரன்கள் சேர்த்து வெளியேற, ஐதராபாத் அணி 21 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அணியை சரிவிலிருந்து மீட்க எய்டன் மார்க்ரம், நிதிஷ் ரெட்டி போராடினர். இருப்பினும், கொல்கத்தா அணியின் துல்லியமான பவுலிங்கிற்கு முன்னால், சன்ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை.


மார்க்ரம் 20 ரன்னும், நிதிஷ் ரெட்டி 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிளாசனால் 17 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஷபாஸ் அகமது 8 ரன்னும், அப்துல் சமத் 4 ரன்களும் எடுத்தனர்.

கேப்டன் கம்மின்ஸின் பொறுப்பான போட்டிங்கால் அணி 100யை தாண்டியது. கம்மின்ஸ் 19 பந்துகளில் 24 ரன்கள் சேர்க்க 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் இறுதிப் போட்டியில் ஓர் அணி எடுத்த மிக குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். ரஹ்மானுல்லா குர்பாஸ் 32 பந்துகளில் 39 ரன்கள் சேர்க்க, வெங்கடேஷ் ஐயர் 26 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷ்ரேயாஸ்  6 ரன்கள் எடுக்க, 10.3 ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் 2012, 2014 ஆம் ஆண்டு சீசனுக்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர் 3 ஆவது முறையாக 2024 சீசனில் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *