நடிகர் தனுஷின் 50வது படமான ராயன் திரைப்படத்தில் ‘வாட்டர் பாக்கெட்’ பாடலை எழுதிய சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கானா காதரை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் தனுஷ் நேரில் அழைத்து பாராட்டினார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ், நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவராக, ஆல் ஏரியாவிலும் அய்யா தான் நம்பர் ஒன் என்று கலக்கி வருகிறார் இவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் குபேரா படத்திலும், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது தனது 50வது படமாக ராயன் படத்தை இயக்கி அதில் நடித்தும் வருகிறார்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில், எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா முரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 13-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் இருந்து தனுஷ் எழுதியுள்ள ‘அடங்காத அசுரனோட ஆட்டம் ஆரம்பம்’ என்ற பாடல் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இணைந்து பாடியிருந்தனர். முதல் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தில் இருந்து இரண்டாவது பாடலான வாட்டர் பாக்கெட் பாடல் நேற்று முன்தினம் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தப் பாடலை கானா காதர் எழுத, சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.
இந்நிலையில், வாட்டர் பாக்கெட் பாடலை எழுதிய கானா காதரை, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தனுஷ் ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டினார்கள். ரகுமான், தனுஷை நேரில் பார்த்த கானா காதர் மகிழ்ச்சியில் திளைத்துப்போனார். 30 பேர் பாடல் எழுதினார்கள் அதில், இவருடைய பாடல் தான் நன்றாக இருந்தது என்று தனுஷ், காதரை ரஹ்மானுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதையடுத்து பேசிய கானா காதர், தான் பெயின்டராக இருப்பதாகவும், பத்து வயதில் இருந்த கானா பாடல் மீது ஈர்ப்பு இருந்ததாகவும் கூறினார். இந்த சந்திப்பு வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.