இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் விவாகரத்து பெறவுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவை சுற்றி தொடர்ச்சியாக சர்ச்சைகள் சூழ்ந்து வருகின்றன. ஏற்கனவே மும்பை அணியின் கேப்டன்சி விவகாரத்தில் ரோகித் சர்மாவை ஓரம்கட்டிவிட்டு அந்த இடத்திற்கு ஹர்திக் பாண்டியா வந்ததாக சர்ச்சைகள் எழுந்தன. அதேபோல் மும்பை அணி ரசிகர்களும் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவே குரல்கள் கொடுத்து ஹர்திக் பாண்டியாவை விளாசி வந்தனர்.
இதனால் ஐபிஎல் தொடர் ஹர்திக் பாண்டியா மோசமான அனுபவத்தை கொடுத்தது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் மற்றொரு சர்ச்சை அவரை சுற்றி வலம் வருகிறது. ஹர்திக் பாண்டியா அவரது மனைவியும் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பெயரில் இருந்து பாண்டியாவின் பெயரை நீக்கியுள்ளார். அதேபோல் ஹர்திக் பாண்டியாவுடனான புகைப்படங்களையும் அழித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரின் போதே மும்பை அணியின் பெவிலியனில் நடாஷா காணப்படவில்லை.
நடாஷாவின் பிறந்தநாளான மார்ச் 4ஆம் தேதியன்று ஹர்திக் பாண்டியாவும் வாழ்த்து கூறி எந்த பதிவையும் வெளியிடவில்லை. நடாஷாவும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக ஒரு பதிவு கூட வெளியிடவில்லை. இதனால் இவர்கள் இருவரும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா – நடாஷா ஸ்டான்கோவிற்கு 2020ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்கள், குழந்தை பிறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இதன்பின் இவர்கள் இருவரும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
தற்போது விவாகரத்து முடிவு காரணமாக ஹர்திக் பாண்டியாவின் 70 சதவிகித சொத்துக்களை மனைவி நடாஷா ஸ்டான்கோவின் பெயருக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு ரூ.165 கோடியாக இருக்கும் சூழலில், விவாகரத்து காரணமாக சுமார் ரூ.100 கோடி அளவிற்கு சொத்துக்களை இழப்பார் என்று கூறப்படுகிறது. இதுவரை இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
தற்போது ஹர்திக் பாண்டியா லண்டனில் இருக்கிறார். அதேபோல் நடாஷா ஸ்டான்கோவிக் தனது வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. செர்பியாவை சேர்ந்த நடிகையான நடாஷா, இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவருமே இதுவரை விவாகரத்து குறித்து மவுனம் காத்து வருவதால், இருவர் தொடர்பாகவும் ஏராளமான வதந்திகளும் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.