நடிகர் சூரி தனது சொந்த ஊரில் புதிதாக கட்டியுள்ள வீட்டின் ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், அதை பார்த்த ரசிகர்கள் எல்லாரும் அசந்து போய் விட்டனர். பங்களா வீடு எல்லாம் கட்டவில்லை என்றும் இது ரொம்ப சின்ன வீடு என நடிகர் சூரி தனது வீட்டை சுற்றிக் காட்டியுள்ளார். சென்னையில் சூரிக்கு தனியாக வீடு உள்ள நிலையில், தனது அம்மா மற்றும் அண்ணன் தம்பிகள் உடன் வசிக்க சொந்த ஊரான மதுரையில் சூரி கட்டி உள்ள வீட்டு வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
பழைய வீட்டை கொஞ்சம் சீர்ப்படுத்திய சூரி புதிதாக 2 பெட்ரூம் கொண்ட வீட்டை கட்டியிருப்பதாக காட்டியுள்ளார்.
சூரியை பொருத்தவரையில் வீடு பெரிதாக இருக்க வேண்டாம் என்றும் வீட்டுக்கு முன் பெரிய இடம் இருக்க வேண்டும் அப்போதுதான் மாலை நேரத்தில் அனைவரும் ஒன்றாக கூடி பாய் போட்டு உட்கார்ந்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். இல்லையென்றால் ஆளுக்கு ஒரு மூலையில் செல்போன்ல தான் குடும்பம் நடத்துவார்கள் எனக் கூறியுள்ளார்.
சூரியின் வீட்டுக்கு அருகே சிறியளவிலான நீச்சல் குளம் ஒன்றையும் கட்டி வைத்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விடுமுறை நாட்களில் இங்கே குளித்து விளையாடுவார்கள். எங்க அப்பா இருக்கும்போதெல்லாம் சின்ன வயசுல அண்ணன் தம்பி ஆறு பேரையும் கிணத்துல போய் தள்ளிவிட்டு நீச்சல் கத்து தருவாரு ஆனால், இப்போ நிலைமை அப்படி இல்லை அதனால் தான் நீச்சல் குளம் கட்டியிருக்கேன் எனக் கூறியுள்ளார்.
நடிகர் சூரி மதுரையில் அம்மன் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆனால், சூரியின் சகோதரர்கள் தான் அந்த உணவகத்தை நடத்தி வருவதாகவும் தான் சினிமா நடிகர் என்பதால் தனது பெயரை மட்டும் சொல்கின்றனர் என்றும் கூறியுள்ளார். அதில் ஒருவர் சூரி போலவே இருக்க, இவரை எனக்கு டூப் போடலாம் என்றும் ஜாலியாக பேசியுள்ளார் சூரி. பெரியண்ணா முதல் சின்ன தம்பி வரை சூரி காட்டியுள்ளார்.”
அண்ணன், தம்பிக்கெல்லாம் திருமணமாகி மனைவிகள் இருந்தாலும் இன்னமும் எங்க அம்மா தான் எல்லாருக்கும் சேர்த்து சமைப்பாங்க அண்ணிகள் எல்லாம் பரிமாறுவார்கள். 50 பேர் வந்தாலும் அம்மா தனியாளா சமைச்சிடுவாங்க என சூரி பேசியுள்ளார். என் அம்மாவுக்கு ஒரேயொரு ஆசை தான் எல்லாரும் ஒண்ணா ஒரே குடும்பமாக கடைசி வரை இருக்க வேண்டும் என்றும் யாரும் சண்டை போட்டு பிரிந்து விடக் கூடாது எனக் கூறியுள்ளார். அண்ணன் தம்பிகள் எல்லாமே கூட்டுக் குடும்பமாக உள்ளதை பார்க்கவே சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
வெற்றிமாறன் திரைக்கதையில் துரை செந்தில்குமார் இயக்க சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கருடன் திரைப்படம் வரும் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் இந்த ஆண்டு சூரி நடித்துள்ள விடுதலை டு மற்றும் கொட்டு காளி திரைப்படங்கள் வரிசையாக வெளியாக காத்திருக்கின்றன.