நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கவுரவப்படுத்தியுள்ளது.
வேட்டையன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வந்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவர் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், பகத் பாசில் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ரஜினிகாந்த் ஓய்வில் உள்ளார். அங்கு பிரபல தொழிலதிபர் யூசுப் அலியுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரஜினிகாந்த் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.
இந்த நிலையில் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் கவுரவமான கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரகம் ரஜினிகாந்திற்கு வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. இந்த விசாவை பெறுபவர்கள் அந்த நாட்டில் 13 வகையான சலுகைகளை அனுபவிக்கலாம்.
கோல்டன் விசாவை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த், ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் லுலு குழுமத்தின் தலைவரும் முன்னணி தொழிலதிபருமான யூசுப் அலி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், ஷாருக்கான், சஞ்சய்தத் உள்ளிட்டோருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி உள்ளது. விரைவில் இந்தியா திரும்பும் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கூலி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.