தோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட கூடும் என்று இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளன.
2025 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 லீக் போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளை பெற்றிருந்தது.
இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. மேலும் நெட் ரன் ரேட் குறைந்ததால் அதே 14 புள்ளிகளை பெற்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
சென்னை அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று பரவலாக தகவல்கள் வெளிவந்தன. விரைவில் தோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட கூடும் என்று இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளன. இந்த நிலையில் சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தோனியின் ஓய்வு தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது- தோனி ஓய்வு பெறுகிறாரா அல்லது விளையாடுகிறாரா என்பது குறித்து அவர் மட்டுமே பதில் அளிக்க முடியும். அவர் என்ன முடிவை அறிவித்தாலும் அதற்கு நாங்கள் மதிப்பு தருவோம். அவர் ஓய்வு பெறுவது குறித்து எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. இருப்பினும் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். அடுத்த சீசனிலும் தோனி விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். மற்றும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. என்று கூறியுள்ளார்.