அமெரிக்காவுக்கு எதிரான முலாவது T20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகளால் அதிர்ச்சித் தோல்வி அடைந்த பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் 0–1 என பின்தங்கியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணியை 20 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த அமெரிக்காவால் முடிந்தது. தௌஹித் ஹிரிதோய் 58 ஓட்டங்களை பெற்றார்.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய அமெரிக்க அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. குறிப்பாக இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்ட அணியில் ஆடி தற்போது அமெரிக்க அணியில் இணைந்திருக்கும் ஹர்மீத் சிங் 13 பந்துகளில் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை விளாசினார்.
அதேபோன்று முன்னாள் நியூசிலாந்து வீரரான கொரி அண்டர்சன் 25 பந்துகளில் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களை பெற்று அமெரிக்க அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
சர்வதேச T20 தரவரிசையில் 19 ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்க அணி ஐ.சி.சி. முழு அங்கத்துவ நாடு ஒன்றை T20 சர்வதேச போட்டியில் வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் அந்த அணி 2021 இல் அயர்லாந்து அணியை தோற்கடித்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று (23) அதே பெரைரி வியுவில் நடைபெறவுள்ளது.