ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபியை ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து நாளை மறுதினம் நடைபெறவுள்ள குவாலிஃபையர் 2 போட்டியில் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டூப்ளசிஸ் களம் இறங்கினர். இருவரும் ஒருநாள் போட்டியைப் போன்று விளையாட ஸ்கோர் மெதுவாகவே உயர்ந்தது. 14 பந்துகளில் டூப்ளசிஸ் 17 ரன்களும், 24 பந்தில் கோலி 33 ரன்களும் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தனர்.
14 பந்துகளில் டூப்ளசிஸ் 17 ரன்களும், 24 பந்தில் கோலி 33 ரன்களும் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேமரூன் கிரீனும் அதிரடியாக விளையாடுவதை தவிர்த்தார். 21 பந்துகளை எதிர்கொண்ட அவர் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். ஓரளவு அதிரடியாக ரன்களை சேர்த்த ரஜத் பட்டிதார் 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி ஓவர்களில் மஹிபால் லோம்ரோர் 32 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 172 ரன்கள் எடுத்தது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோலர் கேட்மோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 46 ரன்கள் சேர்க்க டாம் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் 45 ரன்களும், கேப்டன் சாம்சன் 17 ரன்களும் எடுத்தனர். ரியான் பராக் 36 ரன்களும், ஹெட்மேயர் 26 ரன்களும் சேர்க்க, ரோமன் பவெல் அதிரடியாக 16 ரன்கள் எடுத்தார்.
19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து ராஜஸ்தான் அணி நாளை மறுதினம் சென்னையில் நடைபெறவுள்ள குவாலிஃபையர் 2 போட்டியில் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிறன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.