– உரிமையாளருக்கு மே 31 வரை விளக்கமறியல்
லங்கா பிரீமியர் லீக் (LPL) ஆட்ட நிர்ணய செயற்பாட்டில் ஈடுபட முனைத்த குற்றச்சாட்டில் தம்புள்ள தண்டர்ஸ் (Dambulla Thunders) உரிமையாளர் தமீம் ரஹ்மான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு அமைச்சினால் நிர்வகிக்கப்படும், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவினரால் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றையதினம் (22) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 இல் கொண்டு வரப்பட்ட விளையாட்டுகள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விளையாட்டு அமைச்சின் சட்டத்தின் கீழ் தமீம் ரஹ்மான் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, தமீம் ரஹ்மானை எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, LPL தொடரில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான தம்புள்ளை தண்டர்ஸின் ஒப்பந்தத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமீம் ரஹ்மான் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பங்காளதேஷ் நாட்டவர் ஆவார். தமீம் ரஹ்மானின் இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுவானது, கடந்த ஏப்ரல் மாதம் தம்புள்ளை அணியின் உரிமையை கொள்வனவு செய்திருந்தது.
LPL 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் (21) கொழும்பில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சட்டத்தின் கீழ், ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடாத போதிலும், ஆட்ட நிர்ணயக்காரர்கள் எவரேனும் தங்களை அணுகும் நிலையில், அதனை அதிகாரிகளிடம் தெரிவிக்கத் தவறியவர்களும் குற்றவாளியாக கருதப்படுவார்கள்.
ஆயினும் இவ்வாறான குழப்பங்களும் மத்தியிலும் லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.