ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்காவது முறையாக தகுதி பெற்றிருக்கிறது. முதல் குவாலிபயரில் கே கே ஆர் அணியும், சன்ரைசர்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் பல பரிட்சை நடத்தியது.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகியோர் அபாரமாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் கேகேஆர் அணியின் மிட்செல் ஸ்டார்க் அபாரமான யாக்கறை வீசி டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆக்கினார்.இதேபோன்று அபிஷேக் ஷர்மா மூன்று ரன்களிலும், நிதிஷ்குமார் ரெட்டி 9 ரன்களிலும், சபாஷ் அஹமத் டக் அவுட் ஆகியும் வெளியேறினர்.
இதனால் சன்ரைசர்ஸ் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதனை அடுத்து அபிஷேக் ஷர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் அணியை சரிவிலிந்து மீட்டனர். அபாரமாக விளையாடிய ராகுல் திருப்பாதி 35 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் அப்துல் சமத் 16 ரன்களிலும் கேப்டன் பாட் கம்மின்ஸ் 30 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 19 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது.
கே கே ஆர் அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளும், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதனை அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கே கே ஆர் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய குர்பாஸ் 23 ரன்களும் சுனில் நரைன் 21 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதனை அடுத்து மூன்றாவது விக்கெட் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும் நான்கு சிக்சர்களும் அடங்கும். இதேபோன்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஆட்டம் இழக்காமல் 24 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அவரும் ஐந்து பவுண்டரி, நான்கு சிக்சர்கள் குவித்தார்.
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்களில் எல்லாம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கு எட்டியது. இதன் மூலம் நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கே கே ஆர் அணி தகுதி பெற்றிருக்கிறது.
முக்கிய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் தோல்வியை தழுவியதால் அந்த அணியின் உரிமையாளர் காவியா மாறன் மீண்டும் சோகமாக மாறினார். இந்த நிலையில், சன்ரைசஸ்க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வரும் வெள்ளிக்கிழமை அன்று கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.