ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உயிரிழந்ததாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அஜர்பைஜான் இடையேயான சர்வதேச எல்லைப் பகுதியில் கட்டப்பட்ட அணையின் திறப்பு விழாவுக்கு, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர், ஈரானில் உள்ள கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் இருந்து தலைநகர் தெஹ்ரானுக்கு, அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.
சிறிது நேரத்தில், ஜோல்ஃபா என்ற இடத்தில் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது. மோசமான வானிலை காரணமாக மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு மீட்புப்படையினர் விரைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்த நிலையில், அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஈரான் நாட்டு ஊடகம் அறிவித்தது. மேலும் ஹெலிகாப்டர் முழுமையாக எரிந்த நிலையில் இருப்பதால் ஈரான் அதிபர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.