கடைசி பந்து வரை திக்.. திக்.. திக்.. CSKவை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய RCB அணி

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

பெங்களூருவில் நடந்த வாழ்வா சாவா போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

முதலில் டாஸ் வென்ற சிஸ்கே கேப்டன் ருதுராஜ், பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணி சார்பில் விராட் கோலி மற்றும் டுபிளசி அதிரடி ஆட்டத்தை தொடங்கிய நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால், 3 ஓவர்களில் ஆர்சிபி 31 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் தடைபட்டது.

பின்னர், மழை நின்றதால், 40 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பெங்களூரு அணிக்கு நல்ல தொடக்கம் அளித்த விராட் கோலி 47 ரன்களிலும், டு பிளசி 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ரஜத் படிதார் 41 ரன்களும், கிரீன் 38 ரன்களும் எடுத்து ரன்வேகத்தை மேலும் உயர்த்தினர்.

கடைசி நேரத்தில் களம்புகுந்த தினேஷ் கார்த்திக், க்ரீன், மேக்ஸ்வெல் ஆகியோர் சிக்சர், பவுண்டரிகளை விளாச பெங்களூரு அணி 20 ஓவர்களில் 218 ரன்களை குவித்தது. சிஎஸ்கே வீரர் ஷர்துல் தாகூர் 4 ஓவர்களில் 61 ரன்களை விட்டுக்கொடுத்து தனது மோசமான பந்துவீச்சை பதிவுசெய்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற 219 ரன்கள் தேவையென்றாலும், பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல 201 எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் சிஎஸ்கேவுக்கு ஏற்பட்டது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே சார்பில் அதிக ரன் எடுத்த வீரரான கேப்டன் ருதுராஜூம், ரச்சின் ரவீந்திராவும் ஆட்டத்தை தொடங்கினர். பெங்களூரு அணியின் அதிரடி முடிவாக, முதல் ஓவரை சுழற்பந்துவீச்சாளரான மேக்ஸ்வெல் வீசினர்.

இதற்கு கைமேல் கிடைத்த பலனாக, ஆட்டத்தின் முதல் பந்திலேயே, ருதுராஜ் ஆட்டமிழந்து வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இதையடுத்து களமிறங்கிய மிட்சலும் 4 ரன்களில் ஆட்டமிழக்க சென்னை அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது.

சிறுது நேரம் நிலைத்து நின்று விளையாடிய ரஹானே 33 ரன்களில் வெளியேறியதை தொடர்ந்து, ஷிவம் துபே, சாண்ட்னர் ஆகியோரும் சொற்ப ரன்களின் வெளியேறி சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றினர்.

7-ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய தோனி, கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த நிலையில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்து ரசிகர்களின் நம்பிக்கையை தகர்த்தார். தோனி 13 பந்துகளில் 25 ரன்களை எடுத்து வெளியேறிய நிலையில், கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், பேட்டிங் செய்த ஜடேஜா ஒரு ரன்கூட எடுக்கவில்லை.

இதனால், 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பையும் சிஎஸ்கே இழந்தது. இந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *