செவித்திறனை பாதிக்கும் இயர் போன்களின் பயன்பாடு… 

இயர் போன்கள் ஒரு நபரின் செவித்திறனை பாதிக்கும் அளவிற்கு தீங்கு ஏற்படுத்தலாம். இயர் போன்களை பயன்படுத்துவதால் ஒருவரின் செவித்திறனில் ஏற்படக்கூடிய தாக்கம் என்னென்ன என்பதை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

இன்றைய நாட்களில் பெரும்பாலான நபர்கள் தங்களுடைய ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இயர் போன்களை பயன்படுத்துகின்றனர். இசை கேட்பது, திரைப்படங்கள் பார்ப்பது பிறருடன் போன் பேசுவது என்று பல்வேறு காரணங்களுக்காக நாம் இயர் ஃபோன்களை பயன்படுத்துகிறோம். எக்கச்சக்கமான அம்சங்களுடன் ஏராளமான இயர் போன் வகைகள் சந்தைகளில் கிடைக்கிறது. ஆனால் இயர் போன்களை அதிகப்படியாக பயன்படுத்துவதால் நமக்கு பல்வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இது ஒரு நபரின் செவித்திறனை பாதிக்கும் அளவிற்கு தீங்கு ஏற்படுத்தலாம். இயர் போன்களை பயன்படுத்துவதால் ஒருவரின் செவித்திறனில் ஏற்படக்கூடிய தாக்கம் என்னென்ன என்பதை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

காது கேட்பதில் சிக்கல் : நீண்ட நேரத்திற்கு மற்றும் தொடர்ச்சியாக நீங்கள் அதிக வால்யூமில் இயர் போன்களை பயன்படுத்தினால் அது உங்களுடைய உட்புற காதிலுள்ள மென்மையான செல்களை சேதப்படுத்தும். இந்த மென்மையான செல்கள் ஒலி அலைகளை எலெக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உரத்த ஒலி ஒரு நபரின் செவித்திறனை பாதிக்கலாம். செவி குழாயில் சரியாக ஃபிட்டாகும் இயர் போன்கள் மிகவும் ஆபத்தானவை. இவை நேரடியாக ஒளியை இயர் ட்ரமிற்கு எடுத்துச் செல்கிறது. இதனால் காது கேளாமை ஏற்படலாம்.

நாய்ஸ் கேன்சலிங் சாதனங்களால் ஏற்படும் தீங்குகள் : உங்களுடைய ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துவதற்கு சுற்றுப்புற சத்தத்தை குறைக்க உதவும் திறன் கொண்ட இந்த நாய்ஸ் கேன்சலிங் இயர் போன்கள் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு என்று சொல்லலாம். ஆனால் இதனை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது ஒரு நபரின் செவித்திறன் பாதிப்படைகிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுப்புறத்தில் உள்ள வழக்கமான சத்தங்கள் கேட்காமல் போவதால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது.

சுகாதார சிக்கல்கள் வழக்கமான முறையில் நீங்கள் இயர் போன்களை பயன்படுத்தும் பொழுது உங்கள் காதுகளில் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியா தக்கவைக்கப்படுகிறது. இதனால் காது தொற்றுகள் உண்டாகி அதன் விளைவாக தற்காலிக காது கேளாமை ஏற்படலாம். மேலும் தீவிரமான நிலைகளில் மோசமான தொற்று மற்றும் வலி உண்டாக வாய்ப்புள்ளது. குறிப்பாக இயர் போன்களை நீங்கள் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது உங்களுக்கு தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

காது மெழுகு படிதல் : காது மெழுகு என்பது பொதுவாக காது குழாயை சுத்தப்படுத்தி அதனை பாதுகாக்கிறது. ஆனால் தொடர்ச்சியாக நீங்கள் இயர் போன்களை பயன்படுத்தும் பொழுது காது மெழுகு குழாயினுள் தள்ளப்பட்டு ஒலியை தடை செய்கிறது.

காதிரைச்சல் (Tinnitus) : ஒரு சில சூழ்நிலைகளில் இயர் போன்களை அதிக வால்யூமில் பயன்படுத்துவதால் காதிரைச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உண்டாகலாம். இது காதில் ஒரு விதமான விசில் அல்லது ரிங்கிங் சத்தத்தை ஏற்படுத்துகிறது. இது நிரந்தர காது கேளாமை பிரச்சனையை உண்டாக்கலாம்.

எனவே இனி இயர் போன்களை பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கையாக இருக்கவும். நீண்ட நேரத்திற்கு அவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டாம். மேலும் அதிக வால்யூமில் ஒருபோதும் இயர் போன்களை பயன்படுத்தாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *