இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருடன், இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்தது.
டி20 உலகக் கோப்பையை கவனத்தில் கொண்டு டிராவிட்டின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூன் வரை நீடிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.
பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மே 27 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளருக்கு, 50 ஒரு நாள் போட்டிகள் அல்லது 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்க வேண்டும் என்றும், அவரின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் குறித்து பேட்டியளித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ராகுல் டிராவிட் மீண்டும் பயிற்சியாளர் பொறுப்புக்கு வர விரும்பினால் அவர் அதற்காக விண்ணப்பிக்கட்டும். மற்ற விண்ணப்பங்களை போன்று டிராவிட்டின் விண்ணப்பமும் பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.
இருப்பினும் மீண்டும் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க ராகுல் டிராவிட் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருடன் டிராவிட்டின் பொறுப்பு காலம் நிறைவு பெற்றது. இருப்பினும் உலகக் கோப்பை நெட்டி 20 கிரிக்கெட் தொடரை கவனத்தில் கொண்டு கூடுதலாக அவருக்கு சுமார் 8 மாதங்கள் பொறுப்பு காலம் நீட்டிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய முன்னாள் இந்திய அணி விரர்கள் இருந்துள்ளனர்.