பக்தர்களினால் சிவனொளிபாத மலைக்கு கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்ட பூஜை பொருட்கள் அடங்கிய பொதி மற்றும் சிவனொளி பாத மலை உச்சிக்கு பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற மக்காத கழிவுகள் உற்பத்தி மற்றும் விற்பனையை கடுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு பருவகாலம் யாத்திரையின் போது இலட்சக்கணக்கான பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், டன் கணக்கில் பிளாஸ்டிக் போத்தல்களை பக்தர்கள் எடுத்துச் செல்வதாகவும், அவற்றை மலை உச்சியில் விட்டு செல்வதால் சிவனொளிபாத மலை உச்சி பகுதிகளில் பாரிய குப்பை பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது என கூறுகின்றனர்.
பிளாஸ்டிக் போத்தல்கள் அல்லாத ஏனைய தயாரிப்பில் மக்கும் பொருட்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால், மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதியான சிவனொளிபாத மலை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும் என்றும் மலையக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பிலாஸ்டிக் கவர்கள் மற்றும் இதர பிளாஸ்டிக் போத்தல்கள், குவிந்து கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள், குடிநீர் போத்தல்கள், பிளாஸ்டிக் கப்கள் உள்ளிட்ட மக்காத திண்ம கழிவுகளை அகற்ற ஆண்டுதோறும் அரசு பெருமளவு பணம் செலவழிப்பதாக கூறப்படுகிறது.
பல்வேறு உணவுப் பொருட்களின் பொலித்தீன் கவர்கள் சிவனொளிபாத மலை உச்சி வரை கொண்டு செல்லப்படுவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிவனொளிபாத மலைக்கு நுழையும் போது பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற மக்காத கழிவுகளை கொண்டு செல்வதை முற்றாக தடை செய்ய வேண்டும் அல்லது நாட்டிலேயே மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் வலயங்களில் ஒன்றான புனித தளமான சிவனொளிபாத மலையை பாதுகாக்க கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று மலையக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் பாவனையை இப்போதே கட்டுப்படுத்தாவிடின் அடுத்த சில ஆண்டுகளில் பல கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எனவும் எமது அடுத்து வரும் சந்ததியினர் இவ்வாறான புனித தளமான சிவனொளிபாத மலை பார்க்க முடியாத நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்