கடந்த 2003-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் ஜெகனஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்ற உலககோப்பை இறுதிப்போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய கிரிக்கெட் அணி 2-வது முறையாக கோப்பை வெல்லும் வாய்பினை தவறிவிட்டது. 20 ஆண்டு இடைவெளிக்கு பிறகு உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா மோதும் போட்டி குறித்து பெரிய எதிர்பார்ப்பு உண்டானது.
இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலியா கஅணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா – சுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ரோகித் அதிரடியாகவும் கில் நிதானமாகவும் ஆடிய நிலையில், அணியின் ஸ்கோர் 4.1 ஓவர்களில் 30 ரன்களை கடந்தபோது கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி ரோகித் சர்மாவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் மேக்ஸ்வெல் வீசின 10-வது ஓவரில் தொடர்ந்து ஒரு பவுண்டரி சிக்சர் அடித்த ரோகித் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். 31 பந்துகளை சந்தித்த ரோகித் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து அரைசதத்தை தவறவிட்டார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கே.எல்.ராகுல் விராட்கோலியுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவருமே ஓரிரு ரன்களாக சேர்த்து ஸ்கோரை உயர்த்திய நிலையில், 11-20 ஓவர்கள் வரை இவர்கள் பவுண்டரியே அடிக்கவில்லை. ஆனாலும் இந்தியாவின் ரன்ரேட் 5 ரன்களுக்கு குறையாமல் வந்துகொண்டிருந்தது. இதனிடையே விக்கெட் பாதுகாப்புக்காக நிதானமாக ஆடி வந்த விராட்கோலி 56 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் விராட்கோலி இந்த உலககோப்பை தொடரில் தனது 6-வது அரைசதத்தை பதிவு செய்தார்.
ஆனால் அடுத்த சில பந்துகளை சந்தித்த விராட் கோலி 63 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா உள்ளே வந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்த ஜோடி ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்த நிலையில், ராகுல் அரைசதம் கடந்தார். ஆனால் மறுமுனையில் 22 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக சூர்யகுமார் உள்ளே வந்தார். ராகுல் – சூர்யகுமார் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சூர்யகுமார் ஒரு பவுண்டரி அடித்து இந்திய அணியின் நீண்ட பவுண்டரி இடைவெளியை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்தநிலையில், ஸ்டார்க் வீசிய அற்புதமான ஸ்விங்கில் ராகுல் கீப்பர் இங்க்லிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ராகுல் 107 பந்துகளில் 66 ரன்கள் அடித்தார். இதனையடுத்து களமிறங்கிய ஷமி ஒரு பவுண்டரியுடன் சூர்யகுமாருக்கு கம்பெனி கொடுத்து வருகிறார். இந்திய அணி 42 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.
சிறிது நேரம் தாக்குபிடித்த ஷமி 6 ரன்களில், ஸ்டார்க் பந்தில் இங்கிலிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கி பும்ரா ஒரு ரன் எடுத்திருந்த நிலையில், ஜாம்பா பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். இதனையடுத்து குல்தீப் களமிறங்கினார்.
குல்தீப் சிங்கிள்ஸ் எடுக்க, சூர்யகுமார் பெரிய ஷாட் அடிக்க முயன்றார். இருப்பினும் சூர்யகுமார் 18 ரன்களில் ஹேசல்வுட் பந்தில் இங்கிலிஸிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்தாக சிராஜ் களமிறங்கினார். கடைசி கட்டத்தில் குல்தீப் மற்றும் சிராஜ் ஜோடி அதிரடியாக ஆட முயற்சித்தது.
சிராஜ் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி பந்தில் குல்தீப் ரன் அவுட் ஆனார். குல்தீப் 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்களையும், ஹேசல்வுட் மற்றும் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்களையும், மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் ஹெட் களமிறங்கினர். ஒரு பவுண்டரி விளாசிய வார்னர் 7 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஷமி பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக ஹெட் உடன் மிட்சல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். ஷமி விக்கெட் தேடும் முயற்சியில் ஒயிடுகளாக வீசி ரன்களை வழங்கினார். ஷமி 9 ரன்களை ஒயிடுகள் மூலம் விட்டுக் கொடுத்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்தது. இந்தநிலையில், ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசிய மார்ஷ் 15 ரன்களில் அவுட் ஆனார். அவர் பும்ரா பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்தார். இதனையடுத்து ஸ்மித் களமிறங்கினார்.
ஸ்மித் ஒரு பவுண்டரி அடித்த நிலையில், 9 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் பும்ரா பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். இதனையடுத்து லபுசக்னே களமிறங்கினார். மறுமுனையில் ஆடிய ஹெட் பவுண்டரிகளாக அடித்து ரன் சேர்த்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக ஆடி வந்த டிராவிஸ் ஹெட் அரை சதம் அடித்தார். மறுமுனையில் லபுக்சனே பொறுமையாக விளையாடி கம்பெனி கொடுத்ததால் ஆஸ்திரேலியா அணி 100 ரன்களைக் கடந்தது. ஆஸ்திரேலியா 24 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது.
அரை சதத்திற்கு பிறகு பவுண்டரிகளாக விளாசி விரைவாக ரன் சேர்த்தார் ஹெட். மறுமுனையில் ஆடிய லபுசக்னே நல்ல சப்போர்ட் கொடுக்க, 95 பந்துகளில் ஹெட் சதம் விளாசினார். இதன்மூலம் உலகக் கோப்பை இறுதி போட்டியில் சதம் அடித்தவர்கள் வரிசையில் ஹெட் இணைந்தார். ஆஸ்திரேலியா அணி 35 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது. இருவரையும் வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.
பொறுமையாக ஆடி வந்த லபுசக்னே அரை சதம் அடித்தார். தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். அதிரடியாக ஆடி வந்த ஹெட் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டமிழந்தார். அவர் சிராஜ் பந்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்தார். ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 2 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லபுசக்னே 110 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்களையும், ஷமி மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி 6 ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
உலக கோப்பை தொடர் நாயகன் விருது விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது.
ஆட்டநாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.