இந்தப் போட்டியில் டாஸ் தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் – கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினர். ஸ்டார்க் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய கேப்டன் பவுமா முதல் ஓவரின் கடைசி பந்தில் பூஜ்ஜிய ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதேபோல் நல்ல தொடக்கம் கிடைக்கமால் போராடிய தொடக்க வீரர் குயின்டன் டி காக் 3 ரன்னுக்கு அவுட் ஆனார்.
அடுத்து வந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் 6 ரன்னுக்கும், 2 பவுண்டரியை விரட்டிய ஐடன் மார்க்ரம் 10 ரன்னுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். போட்டியின் போது தூறல் மழை குறுக்கிட்ட நிலையில், போட்டி சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. இந்த தருணத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்து இருந்தது.
போட்டி மீண்டும் 3:55 மணிக்கு தொடங்கிய நிலையில், களத்தில் இருந்த ஹென்ரிச் கிளாசென் – டேவிட் மில்லர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த கிளாசென் 47 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த மார்கோ ஜான்சன் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
மில்லருக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வந்த கோட்ஸி 39 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேசவ் மகராஜ் 4 ரன்களில் வீழ்ந்த நிலையில், நிதானமாக விளையாடிய மில்லர் சதம் கடந்து அசத்தினார். இறுதியில் 116 பந்துகளில் 8 பவுண்டரி 5 சிக்சருடன் 101 ரன்கள் எடுத்து 9-வது விக்கெட்டாக மில்லர் வெளியேறினார்.
இறுதிக்கட்டத்தில் ஒரு சிக்சர் அடித்த ரபாடா கடைசி ஓவரில் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்க அணி 49.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட், ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 213 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில், டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். இதில் அதிரடியாக விளையாடிய வார்னர் 18 பந்துகளில் ஒரு பவுண்டரி 4 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து மார்க்ரம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மிச்செல் மார்ஷ் 6 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமலே ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய மார்கஸ் லபுசேசன் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி அவ்வப்போது பவுண்டரி அடித்த நிலையில், 31 பந்துகளை சந்தித்த லபுசேசன் 2 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து சம்ஷி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 1 ரன்னிலும், நிதானமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 62 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
174 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணிக்கு 7-வது விக்கெட்டுக்கு இணைந்த இங்லிஸ் – ஸ்டார்க் ஜோடி சரிவை கட்டுப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய இங்லிஸ் 49 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 28 ரன்கள் குவித்து கோட்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மீச்செல் ஸ்டார்க்டன் இணைந்து ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இறுதியில் 47.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் கோட்ஸி, சம்ஷி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரபாடா, மார்க்ரம், மகராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா அணி மோத உள்ளது.