சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனி தொகை கைப்பற்றப்பட்டு கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோர் சட்டத்தின் கீழ் இதற்கான அதிகாரம் அதிகார சபைக்கு இருப்பதாகவும் நுகர்வோர் விவகார சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முடிவடைந்த முதல் 10 மாதங்களுக்குள் கட்டுப்பாட்டு விலையை மீறி சீனியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 350 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள்
“சட்டவிரோதமாக சீனி தொகை பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பேலியகொடையில் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையொன்றுக்கு செவ்வாய்க்கிழமை (14) சீல் வைக்கப்பட்டதுடன் அங்கிருந்து 270 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்த வர்த்தக நிலையமொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் சுற்றிவளைத்ததுடன் அங்கிருந்து 5 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டது.
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களுக்குள் 22 ஆயிரம் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது கட்டுப்பாட்டு விலையை மீறி சீனியை விற்பனை செய்த 350 இற்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் சட்டத்தின் கீழ் இதற்கான அதிகாரம் உள்ளது. எவ்வாறாயினும் சீனியை கட்டுப்பாட்டு விலைக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் போது அதற்கான ரசித்தை பெற்றுக்கொண்டு 1977 எனும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு நாம் கோரிக்கை விடுக்கிறோம்.”என்றார்.
அத்துடன், முன்னதாக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான 25 சத வரியை இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்ததையடுத்து சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் விலை அதிகரிப்பை தடுக்கும் நடவடிக்கையாக விசேட வர்த்தமானியின் மூலம் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
அதற்கமைய பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும் பொதி செய்யப்படாத சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 330 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
நுகர்வோர் அதிகார சபையினால் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.