உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து – இந்தியா அணிகள் மோதியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா – சுப்மான் கில் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டு இந்தியாவுக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்.
அவரது விக்கெட்டை கைப்பற்ற நியூசிலாந்து ஒரு பக்கம் போராட, மறுபக்கம் அவர் பந்துகளை எல்லாம் நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். அரைசதம் அடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில், 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் அவுட் ஆனார்.
இதன்பின்னர் களத்தில் இருந்த சுப்மன் கில் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதில், தொடக்க வீரர் கில் 41 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் தனது அதிரடியை தொடர்ந்திருந்த நிலையில், அவருக்கு இடது காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அவர் ஓய்வு எடுக்கச் செல்வதாக தெரிவித்தார்.
கில் 65 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் எடுத்து இருந்தார். அவர் ஓய்வுக்கு வெளியேறிய நிலையில், அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் களம் புகுந்தார். இந்த ஜோடி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் நிலையில், கோலி 59 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவருடன் வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் அரைசதம் விளாசினார். தனது அதிரடியை கைவிடாத கோலி 106 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி 113 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 117 ரன்கள் குவித்து டீம் சவுதீ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய நிலையில், விராட்கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 67 பந்துகளில் 3 பவுண்டரி 8 சிக்சருடன் சதமடித்து அசத்தினார்.
சதமடித்த பின் ஒரு பவுண்டரி அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் 49-வது ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். 69 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரி 8 சிக்சருடன் 105 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (1) தான் சந்தித்த 2-வது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதிக்கட்டத்தில் கே.எல்.ராகுல் 1 சிக்சர் 2 பவுண்டரி அடித்தார். இதன் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்துள்ளது.
சுப்மான் கில் 66 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்சருடன் 80 ரன்களுடனும், ராகுல் 20 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 39 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் சவுதீ 3 விக்கெட்டுகளும், போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 398 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா – டெவான் கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் முதல் ஓவரை சந்தித்த கான்வே 2 பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்தார். ஆனால் 13 ரன்கள் எடுத்திருந்த கான்வே, மற்றும் ரச்சின் ரவீந்திரா 13 ரன்களுக்கும் ஷமி பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழிந்தானர். இதனால் 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணிக்கு 3-வது விக்கெட்டுக்கு இணைந்த வில்லியம்சன் – டேரல் மீச்செல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
இந்த ஜோடியை பிரிக்க இந்திய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவே இல்லை. விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் பீல்டிங்கில் சொதப்பிய இந்திய அணி எக்ஸ்ரா ரன்களை வாரி வழங்கியதால், நியூசிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனிடையே மீச்செல் வில்லியம்சன் இருவரும் மாறி மாறி அரைசதம் அடித்தனர். அரைதசத்தை தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மீச்செல் சதமடித்து அசத்திய நிலையில், மறுபுறம் பொறுப்பாக விளையாடிய கேப்டன் வில்லியம்சன் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி 3-வது விக்கெட்டக்கு, 181 ரன்கள் சேர்த்து அசத்தியது. அடுத்து களமிறங்கிய லத்தம், 2 பந்துகளில் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார். அடுத்து மீச்செல் – பிலிப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில், அதிரடியாக விளையாடிய பிலிப்ஸ், 33 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த செம்போன் 2 ரன்களுக்கும், சதமடித்து நம்பிக்கை கொடுத்த மீச்செல் 119 பந்துகளில் 9 பவுண்டரி 7 சிக்சருடன் 134 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், சிறிது நேரம் தாக்குபிடித்த சாண்டனர் 9 ரன்களில் வீழ்ந்தார்.
தொடர்ந்து டீம் சவுதி 9 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த பெர்குசன் ஒரு சிக்சருடன் 6 ரன்களில் வீழ்ந்தார். இதனால் நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2023-ம் ஆண்டு உலககோப்பை தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் அசத்தலாக பந்துவீச்சிய முகமது ஷமி, 9.5 ஓவர்களில் 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.