Leo திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் Hyaena பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்..!!

Leo திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் Hyaena பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்..!!

கழுதைப்புலிகள் Hyaena

கழுதைப்புலி

புலியைப் போல் முகத்தோற்றமும் , பின்னங்கால் வலுவற்று நடக்கும்போது கழுதையைப் போல் கால்கள் பின்னுவதாழும் கழுதைப்புலிக்கு அப்பெயர் வந்திருக்கக்கூடும்.

அவற்றின் மின்னுகின்ற கண்கள், சேற்று மண் அப்பிய மேனி, மந்தகாச நடை ஆகியவை மனிதப் பார்வைக்கு இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம். .மரநாய் குடும்பத்தின் பிரதிநிதி இது.

.கழுதைப்புலிகளின் தாயகம் ஆப்பிரிக்கா வெப்ப நிலம் இவ்விலங்கு இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது.

அடர்த்தியான கறுப்பு நிறத்தில் ஏழு முதல் ஒன்பதுவரை கோடுகள் கொண்ட வரிக் கழுதைப்புலிகள் இந்தியாவில் உள்ளன. அதுவும் தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம், சீகூர், தெங்குமரகடா போன்ற திறந்தவெளிக் காடுகளில் எண்ணிக்கையில் குறைவாக வாழ்கின்றன.

வரிக் கழுதைப்புலிகள் இரவாடிகள். பகலில் இவற்றை எதிர்கொள்வது அரிதிலும் அரிது. பிடரி, தோள், காதுகள், முகம் போன்றவை கறுப்பு நிறத்தில் இருப்பதால் இவற்றை எளிதில் அடையாளம் காண முடியாது. கழுதைப்புலி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர் அனைத்துண்ணி விலங்காகும். ஒரே இடத்தில் வசிக்காதவை; ஒரு நீர் நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலையைத் தேடி அலைந்து திரிந்துகொண்டிருக்கும்.

கழுதைப்புலியின் இரண்டு காலடித் தடங்களும் ஒன்றுபோல் இருப்ப தில்லை. பின்னங்கால் சிறுத்து மெலிந் துள்ளது. முன்னங்கால் பெரிதாக உள்ளது. முன்னங்கால் ஆழப் பதிந்தி ருப்பதிலிருந்து ஒன்றை உணர முடிகிறது. அதிக எடையுள்ள உணவை இழுத்துக்கொண்டு, வசிப்பிடம்வரை சலிக்காது நடந்து போகும் வகையில் உடலமைப்பைக் கழுதைப்புலிகள் பெற்றுள்ளன.

மற்ற விலங்குகளைக் காட்டிலும் கழுதைப்புலிகளின் தாடை விலங்கின ஆய்வாளர்களைப் பெரிதும் வியக்க வைப்பவை. தன்னைவிடவும் இரண்டு மடங்கு வலிமையான விலங்கை வேட்டையில் வீழ்த்தும் தாடையைக் கொண்ட விலங்கு கழுதைப்புலி ஒன்றே….! மற்ற ஊனுண்ணி விலங்குகளால் மென்று தின்ன முடியாத கடினமான எலும்புகளைக் கழித்துக் கட்டவே தமது தாடைத் திறனைப் பயன்படுத்துகின்றன கழுதைப்புலிகள்.

தனித்த ஒலியெழுப்பி தங்கள் குழுவிற்குச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளக்கூடியவை. ஐந்து சதுர கிலோ மீட்டர் தொலைவிற்குக் காடே அதிரும் குரலை எதிரொலிப்பதால் இரவில் மக்களுக்கு அச்சம் தருபவையாகக் கழுதைப்புலிகளின் குரல் இருந்துள்ளது.

கழுதைப்புலி வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். பெண் கழுதைப்புலிகள் 2-3 வருடங்களில் பருவமடைந்து இனப்பெருக்கத்திற்கு தயராகும். இதன் பேறுகாலம் 88 முதல் 92 நாட்களாகும். தாய் கழுதைப்புலி குட்டிகளை பெரும்பாலும் குகைகளில் ஈன்றெடுக்கும். பொதுவாக 1 முதல் 5 குட்டிகள் வரை ஈனும். குட்டிகள் பிறந்த 30 நாட்களுக்குப் பிறகு மாமிச உணவை உட்கொள்ள ஆரம்பிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *