சிறிலங்கா சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கம் தீர்வை வழங்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர். ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த உறுதி வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.இதற்கமைய, ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமது சங்கத்தினருக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமற்ற வரிக் கொள்கை, இலங்கையில் இருந்து வெளியேறும் வைத்தியர்கள், மருத்துவ கொடுப்பனவுகள் மற்றும் சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மைக்காலமாக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.இதற்கமைய, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் மாகாண ரீதியில் வேலை நிறுத்த போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, அரச அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற சாதகமான பதிலை கருத்திற்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு
இந்த பின்னணியில், சிறிலங்காவின் சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதாக இந்த சந்திப்பின் போது சிறிலங்கா அதிபர் உறுதியளித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.