2013 ஆம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் -சைந்தவி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக கடந்த 11 ஆண்டுகளாக இருந்து வந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ்வதென முடிவு எடுத்துள்ளனர். இது தொடர்பாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இருந்து வருகிறார். அத்துடன் நடிகர், பாடகர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை ஜிவி பிரகாஷ் பெற்றுள்ளார். சிறு வயது முதலையே முதலே பின்னணி பாடல்கள் பலவற்றை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார்.
இவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் சொந்த அக்கா ஏ.ஆர். ரைஹானாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ள ஜிவி பிரகாஷ் வெயில் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாக மாறியது. சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் -சைந்தவி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜிவி பிரகாஷ் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
சில நாட்களாகவே இந்த விவகாரம் குறித்து, தகவல்கள் வெளிவந்த நிலையில் தனது முடிவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் நானும் சைந்தவியும் பிரிந்து வாழ்வதென முடிவு செய்துள்ளோம். எங்களுடைய தனி உரிமைக்கு (Privacy) ஊடக நண்பர்கள், ரசிகர்கள் மதிப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த தருணத்தில் உங்களுடைய புரிதலும், ஆதரவும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்று கூறியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் எடுத்துள்ள முடிவு அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்க்கத் தொடங்கியுள்ளனர்.