தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்துடன் இணையும் கூலி படத்திற்காக தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
சில முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக லோகேஷ் கனகராஜ் சம்பளம் பேசியுள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மாநகரம் படத்தில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜிற்கு, கைதி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இதன்பின்னர் தனது 3 ஆவது படத்திலேயே விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது.
லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படத்தின் மூலமாக கமல் மிகப்பெரும் கம்பேக்கை கொடுத்தார்.
விக்ரம் படத்தை பாராட்டி ஹிந்தி சினிமாவிலும் பல முன்னணி ஹீரோக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடித்த லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.
லியோ படத்திற்கு கலவை விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
சுமார் ரூ. 650 கோடிக்கு தியேட்டர் வெளியீட்டில் லியோ திரைப்படம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் உடன் கூலி என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார்.
ரஜினிகாந்தை பல்வேறு இயக்குனர்கள் தங்களது படங்களில் வித்தியாசமாக காட்டினாலும், லோகேஷ் கனகராஜின் மேக்கிங்கை சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் தனது சம்பளத்தை பல மடங்கு லோகேஷ் கனகராஜ் உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது கூலி படத்திற்காக சுமார் 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக அவர் இயக்கிய லியோ படத்திற்கு ரூபாய் 20 கோடி சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளிவந்தன. தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்கள் கூட ரூ.60 கோடி சம்பளம் பெற்றதில்லை என்று லோகேஷ் கனகராஜ் குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.