ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் சென்னை அணி ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் சென்னை அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை வலுப்படுத்திக் கொள்ளும் என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் இந்த போட்டியை மிகவும் எதிர்பார்த்திருந்தனர்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் அணிக்கு மிகவும் சுமாரான தொடக்கத்தை கொடுத்தனர். 21 பந்துகளில் ஜெய்ஸ்வால் 24ரன்களும், பட்லர் 25 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர்களில் ஓரளவு அதிரடியாக விளையாடிய ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரெல் அணியின் ஸ்கோர் உயர உதவினர்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு தொடக்க வீரர் ரச்சசின் ரவிந்திரா 18 பந்துகளில் 2 சிக்சருடன் 27 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். டேரில் மிட்செல் 22 ரன்கள் சேர்க்க அடுத்து வந்த மொயின் அலி 10 ரன்னும், ஷிவம் துபே 18 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42 ரன்கள் எடுத்தார். 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்த சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.
சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைமை இருந்தது. இந்நிலையில் நல்ல நெட் ரன்ரேட்டுடன் சென்னை அணி வெற்றி பெற்றிருப்பதால் ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.