ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியுள்ளன. இதையடுத்து, வேறு எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் செல்லும்? எந்தெந்த அணிகள் வெளியேறும் என ரசிகர்கள் கணக்குப் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், ரிஷப் பந்த் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. அத்துடன், ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஓவர்களை வீச, டெல்லி அணி அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது. இதனால், கேப்டன் என்ற முறையில் ரிஷப் பந்த் ஒரு போட்டியில் விளையாடத் தடையும், ஊதியத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டால், இரண்டு போட்டிகள் வரை அபராதம் மட்டுமே விதிக்கப்படும். மூன்றாவது போட்டியிலும் தவறு நடந்தால் மட்டுமே தடை விதிக்கப்படும்.
அந்த வகையில், ஏற்கெனவே கொல்கத்தா அணிக்கு எதிராகவும், சென்னை அணிக்கு எதிராகவும் ஓவர்களை வீச டெல்லி அதிக நேரம் எடுத்துக் கொண்டது. அப்போது சென்னைக்கு எதிரான போட்டியின்போது ரூ.12 லட்சமும், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின்போது ரூ.24 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், கேப்டன் ரிஷப் பந்த் ஒரு போட்டியில் விளையாடவும், ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.