குஜராத் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது சென்னை அணி.
டாஸில் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் களத்தில் இறங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதலே சிக்சரும் பவுண்டரியுமாக அடித்ததால் ஸ்கோர் எகிறியது. இந்த இணையை பிரிக்க 6 பவுலர்களை சென்னை அணி பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை. 51 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் சாய் சுதர்ஷன் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 55 பந்துகளில் 6 சிக்சர் 9 பவுண்டரியுடன் சுப்மன் கில் 104 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவ்விரு வீரர்களின் விக்கெட்டையும் சென்னை அணியின் துஷார் தேஷ் பாண்டே கைப்பற்றினார்.
15 ஓவர்களில் ரன் எகிறினாலும், கடைசி 5 ஓவர்களை சிறப்பாக வீசிய சென்னை அணியின் பவுலர்கள் வெறும் 41 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தனர். 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி சென்னை அணி வீரர்கள் விளையாடினர்.
தொடக்க வீரர்கள் ரஹானே, ரச்சின் ரவிந்திரா தலா 1 ரன்னிலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து சென்னை அணிக்கு மோசமான தொடக்கத்தை கொடுத்தனர். 2.5 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதையடுத்து இணைந்த டேரில் மிட்செல் – மொயின் அலி இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. மிட்செல் 34 பந்துகளில் 63 ரன்களும், மொயின் அலி 36 பந்துகளில் 56 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
ரவிந்திர ஜடேஜா 18 ரன்கள் சேர்க்க, ஷிவம் துபே 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தோனி 11 பந்துகளில் 3 சிக்சருடன் 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.