யாழ் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை  அனுமதி 

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும்,  இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று  (07/05/2024) தெரிவித்தார்.

 ஒட்டகப்புலம் பகுதிக்கு  நேற்று விஜயம் செய்த ஆளுநர் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டதுடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி ) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர். 

வசாவிளான் கிழக்கு(J/244), வசாவிளான் மேற்கு(J/245), பலாலி வடக்கு(J/254), பலாலி கிழக்கு(J/253), பலாலி தெற்கு(J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது. இங்கு வசித்த 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களைச் சேர்த்தவர்கள் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி துப்பரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். 

இந்நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் இலகுவாக பிரவேசிக்கக்கூடிய வகையில் பாதைகளை திறக்கவும், வீதிகளை பயன்படுத்தவும் அனுமதி தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைய, குறித்த அனுமதிகளை பாதுகாப்பு பிரிவினருடன் கலந்துரையாடி ஆளுநர் பெற்றுக்கொடுத்தார். 

அதற்கமைய, பொன்னாலை –  பருத்தித்துறை கடற்கரை வீதியில் கண்ணகி அம்மன் கோவில் சந்தியிலிருந்து நாகதம்பிரான் கோவில் வீதி ஊடாக விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிக்க முடியும். அத்துடன் வீரப்பளை வீதியில் பலாலி வீதி நோக்கி 100 மீற்றர் தூரத்திற்குள்ளும், வீரப்பளை சந்தியில் தெற்கு நோக்கி தம்பாளை வீதி (விமான நிலைய வீதி ) ஊடாகவும் விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *