ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
இந்த போட்டியில் தோல்வியடைந்தால், தொடரிலிருந்து வெளியேறும் நிலையை டெல்லி அடையும் என்று கூறப்பட்ட நிலையில், அபாரமான பந்து வீச்சால் ராஜஸ்தானை வென்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஃப்ரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது.
20 பந்துகளில் 3 சிக்சர் 7 பவுண்டரியுடன் மெக்கர்க் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அக்சர் படேல், ரிஷப் பந்த் தலா 15 ரன்களும், அபிஷேக் போரெல் 65 ரன்களும் எடுத்தனர்.
கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 221 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி வீரர்கள் விளையாடினர்.
தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் வெளியேற, ஜோஸ் பட்லர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ரியான் பராக் 27 ரன்களும், சுபம் துபே 25 ரன்களும் எடுத்தனர்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 6 சிக்சர் 8 பவுண்டரியுடன் 86 ரன்கள் குவித்தார்.
17 ஆவது ஓவரின் இறுதியில் டெல்லி அணி ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கடைசி ஓவர்களில் துல்லியமாக வீசிய டெல்லி பவுலர்கள், ராஜஸ்தான் அணிக்கு ரன் எடுக்கும் வாய்ப்பை கொடுக்கவில்லை.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 201 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.