கிழக்கு மாகாணத்திலுள்ள இளம் ஊடகவியலாளர்களுக்கு “பத்திரிகை வடிவமைப்பும் நெறியாள்கையும், தொலைக்காட்சி செய்தி தயாரித்தல் மற்றும் சமாதான ஊடக கோட்பாடுகள்” ஆகிய தலைப்புகளை மையப்படுத்திய செயலமர்வு சம்மாந்துறை சமாதான கற்கைகளுக்கான நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.
சம்மாந்துறை மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இச்செயலமர்வில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர்கள் 20 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
சம்மாந்துறை மீடியா போரத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான எம்.ஐ.பி.பௌசுதீன் தலைமையில் ஆரம்பமான செயலமர்வில் வளவாளர்களாக சிரேஷ்ட ஊடகவியலாளர்களான யூ.எல்.எம். றியாஸ், கியாஸ் ஏ.புஹாரியும் சிறப்பு வளவாளராக பேராசிரியர் எஸ்.எல்.றியாஸும் கலந்துகொண்டு விரிவுரையாற்றினர்.