தேசிய படைவீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது

படைவீரர் கொண்டாட்ட மாதத்தை பிரகடனப்படுத்தும் வகையில் தேசிய படைவீரர் கொடி நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அணிவிக்கப்பட்டது.

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் நிஷாந்த மானகேவினால் படைவீரர் கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.

மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த படைவீரர்களை நினைவு கூறும் வகையில் மே மாதம் ‘படைவீரர் நினைவு மாதமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குரூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், ஏராளமான முப்படைகளின் இராணுவ வீரர்கள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததுடன், பெருமளவு இராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் வாரத்தில் முப்படைகளின் தளபதி கௌரவ ஜனாதிபதிக்கு தேசிய படைவீரர் கொடி அணிவிப்பதன் மூலம் படைவீரர்களின் மாதம் ஆரம்பமாகிறது.

இந்த நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, ரணவிரு சேவா அதிகாரசபை உப தலைவர் எயார் வைஸ் மார்சல் நிஹால் ஜெயசிங்க உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *