முல்லைத்தீவுக்கு SMART எதிர்காலம் மக்கள் நடமாடும் சேவையினை வழங்கிடும் நோ்க்கில் ” நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா” என்னும் தொனிப்பொருளில் (03) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் மக்களுக்கு வழங்கிடும் சேவைகளாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள், வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை பொறுப்பேற்றல், தொழில் வங்கியில் பதிவு செய்தல், வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கான நஸ்ட ஈடு மற்றும் சம்பளம் காப்புறுதி தொடர்பான சேவைகள், EPF/ETF தொடர்பான சேவைகள், தொழிற்றுறை பாடநெறிகள் தொடர்பான பதிவு, தொழில் முனைவாளர்களுக்கு அபிவிருத்தி மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவு, பணியாளர்களுக்கான பாராட்டு, புதிதாக சிந்திக்கும் இளைஞர்களுக்கான SMART YOUTH, போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள், மகளிர் மற்றும் சிறுவர் உரிமைகள் சட்டம் பற்றிய விழிப்புணர்வு, உத்தேச தொழில் வாய்ப்புக்கள் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு, வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் எனப் பல்வேறு சேவைகள் இந்த நடமாடும் சேவையில் வழங்கப்படுகின்றன.
இந்நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பல்வேறு உதவிகளை வழங்கிவைத்தார். இந் நிகழ்வில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநாகதாரலிங்கம், வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள், படையினர்,பொலிஸார் மாணவர்கள், பொதுமக்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.