யாழ் கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல் மேம்படுத்துமாறு   பணிப்புரை

யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ்  பணிப்புரை விடுத்துள்ளார். 

ஆளுநர் செயலகத்தில் நேற்று   (02/05/2024) நடைபெற்ற கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார். 

யாழ் கோட்டையின் உட்புறம் மற்றும் வெளிப்புறச்  சூழலை, சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அழகுபடுத்த தேவையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன  இணைந்து புதிய திட்டங்களை  வடிவமைக்குமாறும், அதற்கான அனுமதியை மத்திய அமைச்சு மற்றும் துறைசார் திணைக்களங்களிடம் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆளுநர்  அறிவுறுத்தினார். 

வரலாற்றுச் சின்னமாக காணப்படும் கோட்டையை பாதுகாப்பதற்கும், அதனூடாக வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். 

மேலும் யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய சுற்றுலா இடங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராயுமாறு   ஆளுநர் தெரிவித்தார். 

இதேவேளை தொல்பொருள் திணைக்களமும், மத்திய கலாசார நிதியமும் மாகாண சபையுடன் இணைந்து செயற்படும் போது, அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க முடியும் என ஆளுநர் கூறினார்.  ஆளுநரின் பணிப்புரைகளை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், பணிப்புரையை துரிதமாக செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும்  தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *