– உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
‘மேதகு’, ‘ராக்கதன்’ உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.
2021-ஆம் ஆண்டு கிட்டு இயக்கத்தில் வெளியான படம் ‘மேதகு’. லிசி ஆண்டனி, வினோத் சாகர் உள்ளிட்டோர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பிரவீன் குமார். இப்படத்தைத் தொடர்ந்து ‘மேதகு 2’, ‘ராக்கதன்’, ‘கக்கன்’ உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரவீன் குமார், சென்னையில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு வைத்தியசாலைக்கு நேற்று (01) மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில், இன்று (02) 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி தனது 28ஆவது வயதில் பிரவீன் குமார் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரவீன் குமாரின் இறுதிச்சடங்கு மாலை 6.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவரின் மறைவுக்கு இரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.