டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்காக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் மைதானங்களை புதுப்பிக்கும் பணிகளை தீவிரப் படுத்தி வருகின்றன.
உலக கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது உலகக்கோப்பை அணிகளை அறிவித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியமும் நேற்று இந்திய அணியை அறிவித்தது. இதில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகக் கோப்பை அணி ஐபிஎல் மற்றும் சர்வதேச தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வைத்து தேர்வு செய்யப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திய அணியில் ஐபிஎல்லில் இந்த சீசனில் மிகச் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சேலம் சின்னப்பம்பட்டி நடராஜன் உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
சில வருடங்களுக்கு முன்னர் இதே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடியவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது தேர்வு செய்யப்பட்டார். அப்போது டெஸ்ட், டி20 என இரண்டு தொடர்களிலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய நடராஜன் அதன் பிறகு காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். அதற்குப் பிறகு காயத்தில் இருந்து மீண்டு வந்தாலும் எந்த சர்வதேச தொடரிலும் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தற்போது டி20 உலக கோப்பைத் தொடர் நெருங்கி வரும் வேளையில் சன்ரைசர்ஸ் அணிக்காக டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜன் உலகக் கோப்பையில் பும்ராவுடன் ஜோடி சேர்ந்து மிகச் சிறந்த பங்களிப்பு இந்திய அணிக்கு கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட வேலையில் அஜித் அகர்க்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு அவரை தேர்வு செய்யவில்லை. இது அனைத்து கிரிக்கெட் வல்லுனர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சுப்பிரமணியம் பத்ரிநாத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்த அவர் கூறும் பொழுது
“தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இரு மடங்கு சிறப்பாக விளையாடி தங்களை நிரூபித்தால் மட்டுமே அணியில் இடம் கொடுப்போம் என இந்திய கிரிக்கெட் வாரியம் பாரபட்சம் காட்டுவது ஏன்? டி20 உலக கோப்பை காண இந்திய அணியில் நடராஜன் கட்டாயமாக இடம் பெற்று இருக்க வேண்டும். நடராஜன் தற்போது மிகச் சிறப்பாக டி20 தொடரில் செயல்பட்டு வருகிறார்.
பிற மாநில வீரர்களைப் போல ஏன் தமிழ்நாட்டு வீரர்களுக்கு மட்டும் கூடுதல் ஆதரவு கிடைப்பதில்லை? தனிப்பட்ட முறையில் நானும் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். மேலும் ஐபிஎல்லில் சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் முகமது சிராஜ் தற்போது உலகக்கோப்பை டி20 அணியில் இடம்பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.