“வசத் சிரிய 2024” புத்தாண்டு கொண்டாட்டம்
- வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள்.
“வசத் சிரிய 2024” தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் வெகு விமரிசையாக (27) கொழும்பு ஷங்ரீலா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
“வசத் சிரிய 2024” புத்தாண்டு அழகியாக அனுராதபுரம் மரதண்டகவல பிரதேசத்தை சேர்ந்த மாதவி பிரார்த்தனா மகுடம் சூடினார். இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பன்னிபிட்டியவை சேர்ந்த பிரபானி எதிரிசிங்க பெற்றுக்கொண்டார்.
“வசத் சிரிய 2024” புத்தாண்டு அழகனாக எச்.டீ.மியூரங்க மகுடம் சூடியிருந்ததோடு அந்த போட்டியில் இரண்டாம் இடத்தை சிலாபத்தை சேர்ந்த ஏ.எம்.ஹிரூஷ சந்தீப பெற்றுக்கொண்டார்.
புத்தாண்டு அழகன், அழகியாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.100,000 பணப்பரிசுடன் தங்கப் பரிசும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.75,000 பணப்பரிசுடன் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
அதேபோல் மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.50,000 பணப்பரிசுடன் ஆறுதல் பரிசும் இறுதி சுற்றுக்கு தெரிவான போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை இணைத்து இந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் அரசதுறை, திறந்த துறை, விருந்தினர் துறை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பல போட்டிகள் நடத்தப்பட்டதுடன், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
பெரியவர்களும், பிள்ளைகளும் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டதுடன் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
வௌிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகளும் போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.
பாரம்பரிய கிராம சமூகத்தில் கிராமத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான அழகிய தொடர்பை வெளிப்படுத்தும் வகையில், கிராமத்து வீட்டுடன் கூடிய சூழலின் மாதிரியொன்றும் இங்கு உருவாக்கப்பட்டதோடு, இனிப்புகள், உடைகள், சிங்களப் புத்தாண்டு சடங்குகள், கிராமிய விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல கண்காட்சிக் கூடங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இராட்டினம், மூங்கில் வெடிக் காட்சிகள், விற்பனை நிலையங்கள் உட்பட மருத்துவ வீடும் மைதானத்தை அலங்கரித்தன.
புத்தாண்டு விழா நடைபெற்ற இடத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்த மக்களுடன் சிநேகபூர்வவமாக கலந்துரையாடியதுடன் சில போட்டிகளையும் பார்வையிட்டார்.
நாட்டின் பிரசித்தமான INFINITY வாத்திய குழுவுடன் இணைந்து, சஹன் ரன்வல உள்ளிட்ட குழுவினரால் நடத்தப்பட்ட, வசத் சிரிய 2024 இசை நிகழ்ச்சியும் நேற்று இரவு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாட்டின் பிரபலமான பாடகர்களான அமல் பெரேரா, சசிகா நிசன்சலா, அசான் பெர்னாண்டோ, ருவன் ஹெட்டியராச்சி, ஆதித்யா வெலிவத்த உள்ளிட்டவர்கள் பாடி அசத்தியிருத்தினர். இந்த இசை நிகழ்வை கண்டுகளிக்க பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.