உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு கோடி! – அதிரடி முடிவெடுத்த பிசிசிஐ..

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் உள்ளிட்ட உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதால், பல வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்.

இந்தியாவில் மற்ற எந்த விளையாட்டுகளை விடவும் அதிகளவு ரசிகர்களையும், வருமானத்தையும் கொண்ட விளையாட்டு கிரிக்கெட் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் மட்டுமே பெரிய அளவுக்கு வருமானத்தை ஈட்டுகிறார்கள். மற்றபடி, ரஞ்சிக் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை உள்ளிட்ட பல உள்நாட்டு தொடர்களில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளம் மிகவும் சொற்பம். அதன் காரணமாகவே, பல வீரர்கள் ரஞ்சிக் கோப்பை உள்ளிட்ட தொடர்களில் விளையாடுவதை தவிர்த்து, ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை ஊக்குவித்தால்தான், திறமையான வீரர்கள் இந்திய அணிக்கு கிடைப்பார்கள் என்றும், அதற்காக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு எவ்வாறு சம்பளத்தை உயர்த்துவது என்ற திட்டத்தை வகுத்து தருமாறு, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் பிசிசிஐ கேட்டதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, 40க்கும் மேற்பட்ட ரஞ்சி போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.60 ஆயிரமும், 21 முதல் 40 போட்டிகள் வரை விளையாடியவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், 20 ஆட்டங்களுக்கு குறைவாக விளையாடியவர்களுக்கு ரூ.40 ஆயிரமும், மாற்று வீரர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

இந்த சம்பளத்தை இரட்டிப்பாக, தற்போது பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால், ஒரு சீனியர் வீரர் பங்கேற்ற அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்த்து, ஐபிஎல் தொடர்களில் விளையாடும் வீரர்களுக்கு கிடுக்கிப்பிடி போட முடிவு செய்துள்ள பிசிசிஐ, தற்போது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதால், மேலும் பல திறமையான வீரர்கள் இந்திய அணிக்கு கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *