அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இத்துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் உறுதியளித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.