யாழ்ப்பாணம், கொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி சுமார் 20 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயணிகளுக்கான பிரயாண சீட்டு விற்பனை மூலமான பணம் உள்ளிட்ட புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான சுமார் ரூ. 20 இலட்ச பணத்தை மோசடி செய்துள்ளமை கணக்காய்வில் தெரிய வந்துள்ளமையால், பொறுப்பதிகாரிக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் புகையிரத நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் , பிரயாண சீட்டினை பெற யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தல் காட்சிப்படுத்தப்பட்டு, புகையிரத நிலைய அலுவலக கதவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொக்குவில் புகையிரத நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளமையால் கொக்குவில், திருநெல்வேலி பகுதி மக்களும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், தொழிநுட்ப கல்லூரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி உள்ளிட்ட கல்வியக மாணவர்கள் என பெரும்பாலானோர் புகையிரத பயணங்களை மேற்கொள்ள சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.