IPL சீசனின் 41ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும்ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது RCB அணி.
ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற ரோயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 206 ஓட்டங்கள் எடுத்தது. விராட் கோலி 51 ஓட்டங்கள், ரஜத் பட்டிதார் 50 ஓட்டங்கள், கேமரூன் கிரீன் 37 ஓட்டங்கள் மற்றும் டூப்ளசி 25 ஓட்டங்கள் எடுத்தனர்.
207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விரட்டியது. அந்த அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் ஓவரில் ஹெட்டை 1 ஓட்த்தில் வெளியேற்றினார் வில் ஜேக்ஸ். 13 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார்.
மார்க்ரம் மற்றும் கிளாசனை ஒரே ஓவரில் வீழ்த்தினார் ஸ்வப்னில் சிங். தொடர்ந்து நிதிஷ் ரெட்டி, அப்துல் சமாத் ஆகியோரும் விக்கெட்டை இழந்தனர். 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 89 ஓட்டங்கள் எடுத்திருந்தது ஹைதராபாத்.
கேப்டன் கம்மின்ஸ் 15 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் குமார் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்தது ஹைதராபாத். அதன் மூலம் RCB வெற்றி பெற்றது. அந்த அணி இதற்கு முன்பாக தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது. RCB பந்துவீச்சாளர்கள் ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.