கம்பனிகளை மகிழ்விக்கவே ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இ.தொ.காவின் அறவழி போராட்டத்தில் குழப்ப முற்பட்டார் என இ.தொ.காவின் பிரதி பொதுச் செயலாளர் செல்லமுத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை தொழிலாளர் காங்கிரசால் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என மலையகத்தில் மாத்திரமே நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அறவழி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் எந்த இடத்திலும் போராட்டம் தடம் மாறி செல்லாத நிலையில் புசல்லாவையில் இடம்பெற்ற போராட்டத்தில் மாத்திரம் பிரச்சினை எழுந்தமைக்கு வேலுகுமாரின் சதியே காரணம். பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இ.தொ.காவின் குண்டர்களால் தாக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்திருந்தார். வேலுகுமார் அவர்கள் தொடர்ந்தும் ஊடகங்களில் இ.தொ.காவின் போராட்டங்களை விமர்சித்து, கம்பனியின் கைகூலியாக செயற்பட்டு,மறைமுகமாக கம்பனிகளை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்திருந்த நிலையில், போராட்டகாரர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அவர்களின் மனதை வேதனைப்படுத்திவிட்டு போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றமை அரசியல் நாகரீகம் அற்ற ஒரு செயற்பாடாகும்.
உலகத்தில் உள்ள எந்த ஒரு முட்டாளும் போராட்டத்தை விமர்சனம் செய்து விட்டு, அந்த போராட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல முயற்சி செய்ய மாட்டான்.
மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் அதிகரித்தாலும் அதிகரிக்காவிடினும் வேலுகுமாரும் அவருடைய குடும்பத்திற்கும் மூன்று நேர உணவும் கிடைக்கும்.இதனால் பாதிப்படைய போவது தோட்ட தொழிலாளர்கள் மாத்திரமே. இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் தோட்ட தொழிலாளர்களை மேலும் மேலும் காயப்படுத்தி போராட்டம் நடக்கும் இடத்திற்கு வருகை தருவது என்பது இ.தொ.காவின் அறவழி போராட்டத்தை குழப்பும் குறிக்கோள் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அநாகரீகமான செயற்பாடு எனவும் நான் கருதுகின்றேன்.
இ.தொ.காவின் போராட்டம் அறவழி போராட்டம் என்பதால் தான்,வேலுகுமார் ஒரு பிளாஸ்டர் கூட அணியாமல் இன்று ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளதுடன், நன்றாக நடந்து சென்று பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்வதையும் காணக்கூடியதாக இருந்தது. வேலுகுமார் சொன்னது போல் காடர்களாலும், குண்டர்களாலும் அவர் தாக்கப்பட்டிருந்தால் வைத்தியசாலையில் படுத்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருப்பார். வேலுகுமார் தனது கம்பனிகளுக்கு விசுவாசத்தை காண்பிக்க இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த முயற்சித்தார் எனபது வெட்ட வெளிச்சமாக தெரிய வருகிறது எனவும் தெரிவித்திருந்தார்.