குறைந்த வருமானம் பெறுவோருக்கான அரிசி வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் சிறப்புற நடைபெற்றது.
கௌரவ மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணத்தில் நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானத்தக் கொண்ட குடும்பங்களுக்கு இரண்டு மாதத்திற்கு 20 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டமானது (21) நாடளாவிய ரீதியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட மொத்தமாக 34146 குடும்பங்களுக்கு இந்த இலவச அரிசி நிவாரணம் வழங்கப்படுகின்றது.
இதன் ஆரம்ப நிகழ்வு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட் குமுழமுனை மத்தி கிராம அலுவலகர் பிரிவின் பொதுநோக்கு மண்டபத்தில் இன்றைய தினம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள் அவர்களின் தலைமையில் காலை 9.30 மணியளவில் அரிசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்கள் 25 குடும்பங்களுக்கு முதற் கட்டமாக பத்து கிலோ அரிசிப்பொதியினையும் வழங்கிவைத்தார்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மொத்தமாக 10241 குடும்பங்கள் இந்த இலவச அரிசி நிவாரணத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் செல்வி சர்மி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர் , கிராம அபிவிருத்தி சங்கங்களின் நிர்வாகிகள், கமக்கார அமைப்பினர், பயனாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.