நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையிடப்பட்டுள்ளது.
பத்து இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியாகி திரையில் சக்கை போடு போட்ட திரைப்படங்களை மீண்டும் கையில் எடுத்து ரீ ரிலிஸ் செய்ய தொடங்கியுள்ளது தமிழ் சினிமா. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ச்சியாக பழைய படங்கள் ரீ ரிலிஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரீ ரிலிஸ் செய்யப்பட்ட வாரணம் ஆயிரம், 3 படங்களை தொடர்ந்து நடிகர் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் 2004 ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான கில்லி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20 ம் தேதி விருதுநகரில் உள்ள திரையரங்குகளில் கில்லி படம் திரையிடப்பட்டது. ஏற்கனவே பார்த்த படம் என்பதெல்லாம் தாண்டி முதல் நாள் முதல் காட்சி போல அரங்கம் நிறைந்து காணப்பட்டது. இது இன்றும் ரசிகர்கள் மத்தியில் கில்லியின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்தை காட்டுகிறது. படம் பார்த்த ரசிகர்கள் பலர் 20 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தும் படம் புதியது போலவே உள்ளது என்றனர்.
இன்று நடிகர் விஜய்க்கு ரசிகராக உள்ள இளம் வயதினர் பலர் கில்லி திரைப்படத்தை டீவியில் தான் பார்த்திருப்பார்கள். இத்தனை ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு படத்தை திரையில் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது என ஒரு இளவயது ரசிகரிடம் கேட்ட போது, இத்தனை வருட இடைவெளியில் எத்தனையோ முறை டீவியில் படத்தை பார்த்துள்ளேன் ஆனால் திரையில் பார்த்தது இதுவே முதல்முறை, தியேட்டர் அனுபவம் நன்றாக இருந்தது என்றார்.