IPL கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற இருக்கின்றது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
பயிற்சிக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணியை சேர்ந்த பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சிறந்த இடத்தில் உள்ளார். அது தொடர வேண்டும் என்று நினைக்கின்றோம் என்றார். மேலும், கிரிக்கெட் விளையாட்டை மகிழ்ச்சியோடு விளையாடுகிறார். பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் அவருக்கென மாறுபட்ட வியூகங்களுடன் பந்து வீச வருகின்றனர். எப்போதும் ஒரு சிறந்த ஃபினிஷராக தோனி இருப்பதால் பந்துவீச்சாளர்கள் தனி வியூகம் அமைத்து பந்துவீச நினைக்கின்றனர். எந்த வியூகத்தில் எதிரணி பவுலர்கள் பந்துவீசினாலும் அதனை முறியடித்து தோனி ரன்கள் குவிக்கிறார்.
இறுதி நேர பந்துவீச்சில் இம்பேக்ட் ப்ளேயர் விதி இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக கூறிய ஹஸ்ஸி, இம்பேக்ட் பிளேயர் விதி பந்து வீசுபவர்களுக்கு நிச்சயம் சவாலாக உள்ளதாகவும் கூறினார்.
மேலும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் சிறப்பான பந்துவீச்சாளராக திகழ்வதாக கூறிய ஹஸ்ஸி, லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்று பாராட்டினார். நாளைய போட்டியில் அவருக்கு பந்து வீசுவது என்பது கொஞ்சம் கடினமானது தான் என்றும் இருப்பினும் நாளைய போட்டியில் நிச்சயம் முழு கவனத்தை செலுத்துவோம் என்று குறிப்பிட்டார்.
அடுத்தடுத்த போட்டிகளைப் பற்றி தற்போது நினைக்கவில்லை என்று கூறிய ஹஸ்ஸி, அடுத்த மூன்று போட்டிகளை வென்றால் தங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்றும், இருந்த போதிலும் தற்போதைக்கு நாளை போட்டியை பற்றி மட்டும் தான் சிந்திப்பதாகவும் கூறினார்.
முன்னதாக லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவிய நிலையில், நாளை சேப்பாக்கம் மைதானத்தில் சொந்த மண்ணில் லக்னோ அணைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது